Wednesday, December 20, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 6ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
6:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவைமானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6

தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கிநம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடியகழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான சிவபெருமானைப் பாடு !

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;ஊன் - உடல்.

Tuesday, December 19, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 5ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
5:
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவைமாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாதமலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற (இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற ! இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்; ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

Monday, December 18, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 4ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
4:
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவைஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! இன்னுமா விடியவில்லை ? படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ? தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்துபாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).

Sunday, December 17, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 3ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
3:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற ! படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடையகுற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ? தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

Saturday, December 16, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 2ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
2:
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவைபாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், "எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தைஉண்மையில் வைத்தாயோ ? படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ? தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? (அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களைநமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்

Thursday, December 14, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 1ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
1:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியைநாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களைவாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயேவிம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயேதன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!


மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; அமளி - படுக்கை.

வணக்கம்


மார்கழியில் பாடப்பெறும் பாடல்களில் முதன்மையானது திருப்பாவையும், திருவெம்பாவையும் . அப்பாடல்களை வரும் நாட்களில் ஒவ்வொன்றாக பாடி கண்ணனையும், முக்கண்ணனையும் வணங்குவோம்.

அப்பாடல்களை பாடியவர்களை பற்றி நம்பதிவர்கள்.
தேசிகன் : ஸ்ரீஆண்டாள் பற்றி
தேசிகன் : திருப்பாவை பற்றி
குமரன் : ஸ்ரீஆண்டாள் பற்றி