Tuesday, December 19, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 5



ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
5:
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை



மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாதமலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற (இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற ! இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்; ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

0 Comments:

Post a Comment

<< Home